ஜனாதிபதியின் உள்நாட்டுப் பயணங்கள் குறித்த தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஜினாத் பிரேமரத்ன தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை கோரிக்கை தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது.
மேலும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி தகவல்அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 5(1)(பி)(1) இன் கீழ் இந்தக் கோரிக்கை முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கிறது.
சட்டத்தின் பிரிவு 31(1) இன் கீழ் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று ஜனாதிபதி செயலகம் விண்ணப்பதாரருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது,
பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத்திடம், ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன
அதில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி ங்க தனிப்பட்ட பயணத்திற்காக அரசநிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று தற்போதைய ஜனாதிபதியும் பல்வேறு இடங்களுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்கின்றார். இதன்போது அவர் உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு பிரிவு பயன்படுத்துவது இல்லையா? இதனை எப்படி பார்க்கின்றீர்கள்? என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜிதஹேரத் ,
இலங்கைக்குள் தற்போதைய ஜனாதிபதி மரண வீடுகளோ ஏதேனும்இடத்திற்கோ வாகனங்களிலும் ஹெலிகளிலும் செல்வதனையும் விசேட விமானத்தில் பயணிப்பதனையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. நாட்டில் அரச அதிகாரிகளுக்கு வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பான முறைமைகள் சுற்று நிருபங்கள் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.